புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 150 தொகுதிகளை காங்கிரஸ் கோரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி 50 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதனால், காங்கிரஸுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.
நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு பேரவைத் தேரதல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில், பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ளது.
கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி வைக்க விரும்புகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிட இருக்கிறது.
காங்கிரஸ் 100 முதல் 150 தொகுதிகள் வரை கோருகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ வெறும் 50 தொகுதிகளை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளது.
2022 சட்டப்பேரவை தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சி ஒரு பெரிய கூட்டணியை அமைத்தது. அதில் காங்கிரஸை தவிர வேறு பல கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
பிறகு 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸுடன் சமாஜ்வாதி மீண்டும் கூட்டணி அமைத்தது. இதில், உ.பி.யின் 80 தொகுதிகளில் 43 இல் இக்கூட்டணி வெற்றி பெற்றது. இதில், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்பட்டது.
2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தியின் செல்வாக்கு உபியில் உயர்ந்து வருவதாகக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘கூட்டணி என்பது தொகுதிகளுக்காக அல்ல வெற்றிக்கானது’ என தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிப் பங்கீட்டுக்கான கணக்கீடுகள் காட்டப்படுகின்றன. 2024 தேர்தலில் காங்கிரஸ் 80 மக்களவைத் தொகுதிகளில் 17 இல் போட்டியிட்டு 6 இல் மட்டுமே வெற்றி பெற்றதை சமாஜ்வாதி சுட்டிக்காட்டுகிறது.
சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதிக்குள் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியிருக்கும் என்பது சமாஜ்வாதி கட்சியின் கணக்கீடு. அதன்படி, காங்கிரஸ் வெற்றி பெற்ற 6 மக்களவைத் தொகுதிகளுக்குள் வரும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளை அக்கட்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அகிலேஷின் நிலைப்பாடாக உள்ளது.
இதன் அடிப்படையில் காங்கிரஸுக்கு கிடைக்கும் 30 தொகுதிகளோடு, 20 தொகுதிகளை கூடுதலாக அளிக்க அகிலேஷ் தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி கணக்கீடுகளின் அடிப்படையிலேயே காங்கிரஸும் தனது கணக்கீடுகளை முன்வைத்துள்ளது. இந்தக் சூத்திரப்படி, 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதன்படி, ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஈடாக 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் வழங்கப்பட்டால், சமாஜ்வாதி கட்சிக்கு 185 இடங்கள் கிடைக்கின்றன.
அதன்படி, சமாஜ்வாதி 185 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மொத்தம் 215 என்றாகிறது. மீதமுள்ள 188 தொகுதிகளின் நிலை என்ன? என காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், காங்கிரஸ் கிட்டத்தட்ட சமமான பங்கைக் கோருகிறது.
இதன் காரணமாக, உ.பியின் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிகள் விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறது. அதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொட்பான இண்டியா கூட்டணி கூட்டத்திலும் அகிலேஷ் கலந்து கொள்ளாமல் தன் பிரதிநிதியை அனுப்பியிருந்தார்.
சமாஜ்வாதி - காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மோதல் அறிக்கைகள் துவங்கி விட்டன. சமாஜ்வாதி எம்பி சிவ்பால் சிங் படேல், “2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு முழு ஆதரவை சமாஜ்வாதி அளித்தது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் அனைத்திலும், ஒவ்வொரு வாக்கும் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கே சென்றன. எல்லா வகையிலும் நாங்கள் காங்கிரஸை விட வெகு முன்னிலையில் இருக்கிறோம்.
அவர்கள் 50 இடங்களுக்கு மேல் கேட்கக்கூடாது. அதிலேயே திருப்தி அடைய வேண்டும். அவர்கள் சமாஜ்வாதியுடன் ஒத்துழைக்க வேண்டுமே தவிர, அபத்தமான அல்லது எதிர்மறையான கருத்துகளை வெளியிடக்கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.