இந்தியா

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சேர்க்கைக்கு புதியதாக ‘எஸ்எஸ்ஆர்’ அமல்: தேர்தல் ஆணையம் அதிரடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பு​திய வாக்​காளர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர்​-ல் விடு​பட்​ட​வர்​களை சேர்ப்​ப​தற்​காக தமி​ழ​கம் உட்​பட 17 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் சிறப்பு சுருக்​கத் திருத்​தம் (எஸ்​எஸ்​ஆர்) மேற்​கொள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் பல்​வேறு கட்​டங்​களாக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதில் பல்​வேறு குளறு​படிகளும், முறை​கேடு​களும் இருப்​ப​தாக​வும், 13 கோடி வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும் எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இந்த முறை​கேடு​களுக்கு பொறுப்​பேற்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என்று வலி​யுறுத்தி இண்​டியா கூட்​டணி கட்​சிகளும், கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யும் (சிஜேபி) தொடர் போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன.

இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவிடம் மனு அளித்​தது மட்​டுமல்​லாமல், உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல்​காந்தி சார்​பில் தாக்​கல் செய்த இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்த போது உரிய பதில் அளிக்க தேர்​தல் ஆணை​யத்​திற்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்த சர்ச்​சைகளுக்கு மத்​தி​யில் நேற்று புதிய திருப்​ப​மாக புதிய வாக்​காளர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர்​-ல் விடு​பட்​ட​வர்​களை சேர்ப்​ப​தற்​காக தமிழ்​நாடு உட்பட 17 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் சிறப்பு சுருக்​கத் திருத்​தம் (எஸ்​எஸ்​ஆர்) மேற்​கொள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.அதன்​விவரம் வரு​மாறு;

>> சிறப்பு சுருக்​கத் திருத்​தம் தமி​ழ​கம்​, மேற்கு வங்​கம், உத்தர பிரதேசம், பஞ்​சாப் மற்​றும் பிஹார் உள்​ளிட்ட 17 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் நடத்​தப்பட உள்​ளது. இதில் சேர்க்​கப்பட வேண்​டிய​வர்​களுக்​கான தகுதி நாளாக ஜனவரி 1, 2027 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

>> நவம்​பர் 2-ம் தேதிக்​குள் வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைக்​கப்​படும். நவம்​பர் 12-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். கோரிக்​கை​கள் மற்​றும் ஆட்​சேபனை​களை நவம்​பர் 12 முதல் டிசம்​பர் 11 வரை தாக்​கல் செய்​ய​லாம். இவற்​றின் மீது டிசம்​பர் 28-ம் தேதிக்​குள் முடிவு எடுக்க வேண்​டும். இறுதி வாக்​காளர் பட்​டியல் 2027 ஜனவரி 4 அன்று வெளி​யிடப்​படும். 2027 ஜனவரி 1 தகு​தித் தேதிக்​கான கோரிக்​கை​களு​டன் ஏப்​ரல் 1, ஜூலை 1 மற்​றும் 2027 அக்​டோபர் 1 ஆகிய மூன்று பிந்​தைய தகு​தித் தேதி​களுக்​கான முன்​கூட்​டிய விண்​ணப்​பங்​களை​யும் தேர்​தல் பதிவு அலு​வலர்​கள் ஏற்​றுக்​கொள்​வார்​கள்.

>> பெயர் சேர்க்க வேண்​டிய​வர்​கள் படிவம் 6 மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

>> மொத்த வாக்​காளர்​களில் 2 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பெயர் நீக்​கங்​கள் முன்​மொழியப்​பட்​டால், தேர்​தல் பதிவு அதி​காரி​கள் அவற்றை நேரடி​யாகச் சரி​பார்க்க வேண்​டும். எந்​தவொரு வாக்​குச்​சாவடி​யிலும் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருக்​கக்​கூ​டாது. வாக்​காளர்​கள் இரண்டு கிலோமீட்​டருக்கு மேல் பயணிக்​கவோ அல்​லது இயற்கை தடைகளைக் கடக்​கவோ தேவை​யில்​லை, மேலும் வாக்​குச்​சாவடிகள் தரைத்​தளத்​தில் அமைய வேண்​டும்.

>> ஒரே கதவு அல்​லது ஒரே அடுக்​கு​மாடி எண் கொண்ட குடும்​பங்​கள், வெவ்​வேறு பிரி​வு​களிலோ அல்​லது வாக்​குச்​சாவடிகளிலோ பிரிக்​கப்​படக்​கூ​டாது.

>> ஒரே நபர் ஐந்​துக்​கும் மேற்​பட்ட எதிர்ப்​பு​களை அளித்​திருந்​தா​லும், தேர்​தல் பதிவு அதி​காரி​கள் தனிப்​பட்ட முறை​யில் ஆய்வு செய்ய வேண்​டும். ஒவ்​வொரு நீக்​கல் வழக்​கிலும் சம்​பந்​தப்​பட்ட நபருக்கு விளக்​கம் அளிக்​கும் வாய்ப்பு வழங்​கப்​பட்ட பின்​னரே தேர்​தல் பதிவு அதி​காரி​கள் காரணங்​களு​டன் கூடிய உத்​தரவை வழங்க வேண்​டும். அந்த உத்​தரவு தேர்​தல் ஆணை​யத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்பட வேண்​டும்.

>> பெறப்​படும் கோரிக்​கை​கள் மற்​றும் எதிர்ப்​பு​கள் தொடர்​பான பட்​டியல்​கள் ஒவ்​வொரு வார​மும் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களின் இணை​யதளங்​களில் வெளி​யிடப்பட வேண்​டும். அரசி​யல் கட்​சிகளுக்​கும் வழங்​கப்பட வேண்​டும்

>> இந்த எஸ்​எஸ்​ஆர் நடை​முறை தமிழ்​நாடு, அசாம், பிஹார், சத்​தீஸ்​கர், கோவா, குஜ​ராத், கேரளா, மத்​திய பிரதேசம், மணிப்​பூர், பஞ்​சாப், ராஜஸ்​தான், உத்தர பிரதேசம், உத்​தர​காண்ட் மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய 14 மாநிலங்​களி​லும், அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​கள், லட்​சத்​தீவு மற்​றும் புதுச்​சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்​களி​லும் நடை​பெற உள்​ளது.

>> ஆந்​திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சண்​டிகர், தாத்ரா மற்​றும் நகர் ஹவேலி, டாமன் மற்​றும் டையூ, ஹரி​யா​னா, ஜார்​கண்ட், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, மேகால​யா, மிசோரம், நாகாலாந்​து, டெல்​லி, ஒடி​சா, சிக்​கிம், திரிபுரா மற்​றும் தெலங்​கானா ஆகிய பகு​தி​களில் எஸ்​ஐஆர் நடை​பெற்று வரு​வ​தால் அல்​லது சமீபத்​தில் முடிவடைந்​துள்​ள​தால், அந்த பகு​தி​களுக்​கான எஸ்எஸ்​ஆர் அட்​ட​வணை பின்​னர் அறிவிக்​கப்​படும்.

>> இமாச்சல பிரதேசம், ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் ஆகிய பகு​தி​களில் எஸ்​ஐஆர் இன்​னும் தொடங்​கப்​ப​டாத​தால், அங்​குள்ள வானிலைச் சூழ்​நிலை​களை கருத்​தில் கொண்டு வாக்​காளர் பட்​டியல் திருத்த அட்​ட​வணை பின்​னர் வெளி​யிடப்​படும். இவ்​வாறு உத்​தரவில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எஸ்ஐஆர், எஸ்எஸ்ஆர் என்ன வித்தியாசம்?

எஸ்எஸ்ஆர் (சுருக்கமான திருத்த நடைமுறை - Special Summary Revision) என்பது, அரசியல் மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகளுக்கு உள்ளான ‘சிறப்பு தீவிர திருத்த நடைமுறை’ (எஸ்ஐஆர் - Special Intensive Revision) என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு செயல்முறையாகும். எஸ்ஐஆர் முறையில் வாக்காளர் பட்டியல் புதிதாக மறுசீரமைக்கப்படுகிறது. ஆனால் எஸ்எஸ்ஆர் ஏற்கனவே உள்ள பட்டியலில் தேவையான திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. எஸ்எஸ்ஆர் என்பது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் முந்தைய சுழற்சிக்கான கால அட்டவணை 2024 ஆகஸ்ட் 7 அன்று வெளியிடப்பட்டது.அதன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் 2025 ஜனவரி 6 முதல் 10-ஆம் தேதிக்குள் வெளியிடப்பட்டன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT