இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை ஏற்பாடு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தங்களின் வருகையை முன்கூட்டியே தெரிவிக்கும் துறவிகளுக்கு, அறக்கட்டளை சிறப்பு தரிசனத்துக்கான அடையாள அனுமதி அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அனைத்து ஏற்பாடுகளையும் மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, துறவிகள் மற்றும் முனிவர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் துறவிகளும் குழந்தை ராமரை தரிசிக்க அறக்கட்டளை ஏற்பாடு செய்கிறது.

இதற்காக, அறக்கட்டளை அலுவலகத்திலோ அல்லது இது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் அதிகாரிகளிடமோ துறவிகள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பின், அவர்களுக்கு மரியாதையுடன் கூடிய எளிதான தரிசன வசதி செய்து தரப்படும். இதற்கெனத் தனி அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்படும். இந்த ஏற்பாடு விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

வெளியூரில் இருந்து வரும் துறவிகள் மட்டுமின்றி, அயோத்தியைச் சேர்ந்த துறவிகளும் இந்த வசதியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்குச் செல்லும் முன் தகவல் தெரிவித்தால், அந்தத் துறவிகள் குழுவினர், தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேற்கொள்ளும். சாதுக்களை ஒருங்கிணைக்கவும் தரிசன ஏற்பாடுகளை நிர்வகிக்கவும், சமீபத்தில் ஆச்சார்யா இந்திரதேவ் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவைப்பட்டால் துறவிகளுக்கான தங்குமிட வசதிகளைச் செய்து தருவதுடன், அவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொள்வார். துறவிகளின் வருகை மற்றும் தரிசன நடைமுறைகளை மேலும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காணிக்கைகள் திருடப்பட்டதையடுத்து, துறவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. தற்போதைய சிறப்பு தரிசன நடவடிக்கை மூலம் துறவிகளின் அதிருப்தியைக் குறைப்பதற்கான முயற்சிகளாகக் கருதப்படுகிறது. அயோத்தி சாதுக்களுடன் பேசி ஆலோசனை செய்து அவர்களது யோசனைகளையும் செயல்படுத்தவும் அறக்கட்டளை தொடங்கியுள்ளது. கோயில் விழாக்களுக்கு தர்மக் குழுப் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

அவர்களின் திட்டத்தைப் பின்பற்றியே கோயில் வழிபாடுகள் மற்றும் மதச் சடங்குகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துறவிகளின் தரிசன வசதிக்காக தனியாக அறக்கட்டளை உதவி மைய எண்: 05278 - 292000, 80095 22111 மற்றும் மின்னஞ்சல்: contact@srjbtkshetra.org வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சிஇஒ நியமனம்- அறக்கட்டளையின் சிஇஒ-வான சம்பக் ராய் காணிக்கை திருட்டு பொறுப்பை ஏற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அப்பதவிக்கு சுமார் 5,585 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் வெறும் 16 பேரை தேர்வு செய்து மூன்று பேர் கொண்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தியது.

ஓய்வு பெற்ற நீதிபதி பிரமோத் கொஹலி, லெப்டினண்ட் ஜெனரல் (ஓய்வு) விஷ்ணுகாந்த் சதுர்வேதி மற்றும் விஞ்ஞானி முனைவர். சுரேஷ் ஹாவ்ரே ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். இவர்களில் 3 பேர் இறுதிப் பட்டியல் தயாராகி உள்ளது.

இதில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே, ஐஏஎஸ் அதிகாரிகளான யேகேஷ்வர் ராம் மிஸ்ரா மற்றும் தினேஷ் சந்திரா இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் பெயர் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் அறக்கட்டளை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT