இந்தியா

தென்மேற்கு பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி வாக்கில் தொடங்கும். அதன் பின்னர் தென்மேற்கு பருவமழை கர்நாடகா, மகாராஷ்டிரா வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் பொழியும். கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 24-ம் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழை மே 26-ம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது. எனினும், இது அந்த தேதியிலிருந்து நான்கு நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தொடங்கவும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும் இந்தப் பருவமழைக் காலம், இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் ஏறக்குறைய 70 சதவீதத்தை வழங்குகிறது. மேலும், இப்பருவமழை விவசாயத்திற்கும், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை நிரப்புவதற்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1971-2020 காலகட்டத்தின் சராசரி மழைப்பொழிவான 87 செ.மீ. உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சுமார் 80 செ.மீ. ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT