இடது: சோனியா காந்தி | வலது: சித்ரா சுப்பிரமணியம்

 
இந்தியா

‘சுயசரிதையில் போபர்ஸ் ஊழல் குறித்து சோனியா மவுனம்’ - மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: போபர்ஸ் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் எதுவும் குறிப்பிடாமல் மவுனமாகி விட்டதாக மூத்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையை, ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் பலவகைகளில் சர்ச்சையை கிளப்பி பிரபலமாகி வருகிறது.

தனது இளமைக் காலம் முதலான பல்வேறு விஷயங்களை சோனியா காந்தி இதில் பகிர்ந்துள்ளார். ஆனால் அவர், அந்த புத்தகத்தில் போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து மவுனம் காத்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரான சித்ரா சுப்பிரமணியம் இந்த விமர்சனத்தை எழுப்பியுள்ளார். இதனால், போபர்ஸ் பீரங்கி ஒப்பந்த சர்ச்சை மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து குறிப்பிடும் சித்ரா சுப்பிரமணியம், ‘இந்தப் புத்தகம் போபர்ஸ் வழக்கைத் திசை திருப்பும் அல்லது மறைக்கும் முயற்சி. சோனியா காந்தியின் நண்பரும் இத்தாலிய தொழிலதிபருமான ஒட்டாவியோ குவாட்ரோச்சி இந்த ஒப்பந்தத்தில் லஞ்சம் பெற்றிருந்தார். ஆனால் சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பில் அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

மேலும், போபர்ஸ் ஒப்பந்தத்துக்கும் தனது குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதிலிருந்து எந்தவிதமான நிதிப் பலனையும் பெறவில்லை என்றும் சோனியா காந்தி தனது புத்தகத்தில் மறுத்துள்ளார்.

ஆனால், குவாட்ரோச்சியின் பங்களிப்பை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. போபர்ஸ் வழக்கின் முக்கிய ஆதார நபர்களில் ஒருவரான ஸ்வீடன் காவல் துறைத் தலைவர் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோமிடம், இந்தப் புத்தகம் குறித்து நான் பேசினேன்.

இந்தியாவில் குவாட்ரோச்சிக்கு செல்வாக்குமிக்க தொடர்புகள் இருந்தன. பெட்ரோ கெமிக்கல் துறையில் பணியாற்றிய குவாட்ரோச்சிக்கு, அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது.

டெல்லியில் குவாட்ரோச்சியின் இல்ல விருந்து ஒன்றில் எனது தந்தையும் கலந்துகொண்டார். அங்கு குவாட்ரோச்சிக்கும் காந்தி குடும்பத்தினருக்கும் இடையிலான நெருக்கத்தை விவரிக்கும் புகைப்படங்கள் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பீரங்கி ஒப்பந்தத்தை இந்தியாவிடம் இருந்து பெற்றுத் தருவதாக குவாட்ரோச்சி, போபர்ஸ் நிறுவனத்துக்கு உறுதியளித்திருந்தார். இந்த ஒப்பந்தத்தில் எந்த லஞ்சமும் கைமாறவில்லை என்பதை இந்தியர்கள் நம்ப வேண்டுமா?’ என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT