இந்தியா

சோனியா காந்தியின் உடல்நிலை: டெல்லி மருத்துவமனை அறிக்கை வெளியீடு

மோகன் கணபதி

புதுடெல்லி: சோனியா காந்திக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறும்போது, ‘‘சோனியா காந்தி, மார்ச் 24-ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் ஏற்பட்டுள்ள தொற்றுநோயைக் குணப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மூத்த மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவின் நேரடிக் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அக்குழுவினர், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.

          

முன்னெச்சரிக்கை கருதி இன்னும் ஓரிரு நாட்கள் சோனியா காந்தி மருத்துவமனையிலேயே தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கக்கூடும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைக்கிடமாக ஏதுவும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

79 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்தித்து வருகிறார். சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் சோனியா காந்தி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது டெல்லியில் நிலவிய கடும் குளிர் மற்றும் காற்று மாசுபாடு, அவரது உடல்நிலை பாதிக்கப்பட காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சோனியா காந்திக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் அந்த பாதிப்பு சற்று தீவிரமடைந்திருந்தது.

SCROLL FOR NEXT