அரசியலில் சில வேளைகளில் தற்காப்புக் கவசமாக இருக்கும் ‘மவுனம்’ கலைக்கப்படும்போது கூர்மையான வாளாக மாறிவிடுகிறது. சுயசரிதையாக வெளிப்படும்போது அதன் வீச்சு நினைத்துப் பார்க்காத விளைவுகளைத் தருகிறது. அப்படி சமீபத்திய வெளியான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love), பஞ்சாப் அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கிடந்த ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ மற்றும் சீக்கியர்கள் படுகொலையில் படிந்த ரணங்களை கிளறிவிட்டுள்ளது.
சோனியா அளித்துள்ள விளக்கங்கள், காங்கிரஸ் கட்சியின் கடந்த காலத் தவறுகளுக்கு மருந்திடுவதற்கு பதிலாக, ஆறாத வடுக்களில் மீண்டும் உப்பைத் தடவியுள்ளது. சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் காங்கிரஸ் குடும்பத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சி செய்திருந்தாலும், அதில் அவர் முன்வைத்துள்ள தற்காப்பு வாதங்கள், சீக்கிய வாக்காளர்களைச் சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களைக் கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளன.
பஞ்சாபில் 2027 தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் காங்கிரஸ் கட்சிக்கு, அதன் மூத்த தலைவரின் இந்த சுயசரிதைக் குறிப்புகள் ஒரு மாபெரும் அரசியல் முட்டுக்கட்டையாகவும், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அகாலி தளம் கட்சிகளுக்கு சாதகமான திருப்புமுனையாகவும் மாறுமா என்ற கேள்வியும் எழுகிறது.
சோனியாவின் நினைவு பரண்:
காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில், கடந்த 1984-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ சம்பவம், டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 1975 அவசரநிலை ஆகியவை குறித்து விவரித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்...
‘சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: இது, இந்தியாவின் வரலாற்றில் ஒரு சோகமானதும், வெட்கக்கேடானதுமான அத்தியாயம். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாக இயந்திரம் முழுமையாகச் செயல் இழந்ததால் வன்முறை வெடித்தது. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எந்தவொரு பங்கும் இல்லை. ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையில் பொற்கோயிலின் சேதங்கள் குறித்த காட்சிகளைப் பார்த்தபோது இந்திரா காந்தி கண்ணீர்விட்டு அழுதார் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கான இலவச ஆயுதம்:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 2027 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வெளிவந்திருக்கும் தனது சுயசரிதையில், சோனியா காந்தி வருத்தம் தெரிவித்தாலும், தனது குடும்பத்தை நியாயப்படுத்த முயன்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்குச் சாதகத்தை விடப் பாதகத்தையே அதிகம் ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சோனியா காந்தியின் இந்த சுயசரிதையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அகாலி தளம் குற்றச்சாட்டு:
அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், “1984-ல் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்றவர்களுக்கு சோனியா காந்தி நற்சான்றிதழ் வழங்கியது குறித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கள்ள மவுனத்தைக் கலைக்க வேண்டும். ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ தாக்குதல் நடத்த ஒரு சீக்கிய ஜெனரலை நியமிக்க முடிந்த காங்கிரஸ் அரசால், அந்தப் படுகொலையில் அப்பாவி சீக்கியர்களைப் பாதுகாக்க ஏன் சீக்கிய ராணுவ வீரர்களைப் பயன்படுத்த முடியவில்லை?” எனச் சாடியுள்ளார்.
பாஜக கண்டனம்:
பாஜக மாநிலத் தலைவர் கேவல் சிங் தில்லான், “42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரா காந்தி குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தவறுகளை மறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட அரசியல் தந்திரம் இது. சோனியாவின் விளக்கம், சீக்கிய சமூகத்தின் காயங்களில் மீண்டும் உப்பைப் பூசுவது போன்ற ஒரு செயலாகும்.
சீக்கியப் புனிதத் தலங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதையும், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் வெறும் ‘வருந்தத்தக்க அத்தியாயம்’ என்று கூறி கடந்து சென்றுவிட முடியாது. வரலாற்றுப் பொறுப்பிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
சீக்கிய அமைப்புகளின் எதிர்ப்பு:
டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவினர் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலின் பிரதிகளை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், 1984 கலவர வழக்குகளில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா கூறுகையில், “அக்டோபர் 31-ஆம் தேதியே டெல்லியில் சுமார் 6,000 ராணுவ வீரர்கள் இருந்தபோதிலும், சிவில் நிர்வாகம் அவர்களைப் பயன்படுத்தவில்லை என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் கூறியுள்ளது. சோனியா நூலில் கூறியிருப்பது அதற்கு முரணாக இருக்கிறது” எனச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கேடயமாகுமா சுயசரிதை?
சீக்கிய அமைப்புகளிடம் கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், குறிப்பிட்ட சில கோணங்களில், இது காங்கிரஸ் கட்சிக்கு உதவக்கூடும் என அதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். சோனியா காந்தி இந்த நூலின் மூலம் ‘இந்திரா காந்தி குடும்பம் சீக்கியர்களுக்கு எதிரானது அல்ல’ என்பதை வலியுறுத்தி இருப்பது, 1975 அவசரநிலை தவறு என்பதை ஒப்புக்கொண்டது, பிரதமர் பதவியை நிராகரித்ததற்கான காரணங்கள் ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.
ஆனால், “சோனியா காந்தியின் சுயசரிதை சீக்கியர்களின் வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தல் பிரச்சார ஆயுதத்தை வழங்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 7 இடங்களை வென்று, 2027 தேர்தலுக்காகத் திரட்டியிருந்த உத்வேகத்துக்கு இதுவொரு பின்னடைவாகும். 1984 கலவரக் காயங்களை மீண்டும் கிளறியிருப்பது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சீக்கிய வாக்காளர்களின் மனநிலை:
பஞ்சாபின் மொத்த வாக்காளர்களில் சீக்கியர்கள் சுமார் 58 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் அரசியல் நிலைப்பாடு எந்தவொரு கட்சியின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
ஆனால், பாரம்பரியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்தின் மீதான நம்பிக்கையைச் சீக்கியர்கள் மெல்ல இழந்து வருவதால் மாற்று வழிகளைத் தேடுகின்றனர். அதனால்தான் கடந்த முறை ஆம் ஆத்மிக்கு ஆளும் வாய்ப்புக் கிடைத்தது.
இதற்கிடையே, பஞ்சாப் அரசியலில் ‘எஸ்.ஜி.பி.சி’ (SGPC) எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி, சீக்கியர்களின் மினி நாடாளுமன்றம் என்று அழைக்கப்படும் மிக முக்கியமான மத மற்றும் நிர்வாக அமைப்பாகும். இது சீக்கியர்களின் குருத்வாராக்களை நிர்வகிப்பதோடு, பஞ்சாபின் மத மற்றும் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதில் பல ஆண்டுகளாகத் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.
சோனியா காந்தியின் சுயசரிதை நூலை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்து, அதன் பிரதிகளைத் தீயிட்டு எரித்துள்ளதால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எடுக்கப் போகும் நிலைப்பாடு காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தீவிரமாகத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.