புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய `பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை புத்தகம் நேற்று முன்தினம் வெளியானது. 544 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் 2004-ல் பிரதமர் பதவியை மறுத்தது, அவசர நிலையை ராஜீவ் காந்தி எதிர்த்தது, மேனகா காந்தியுடனான கருத்துவேறுபாடு என பல்வேறு விஷயங்கள் குறித்து சோனியா காந்தி மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: சோனியா காந்தி செய்தது எவ்வளவு பெரிய தியாகம். பிரதமர் பதவியை விட்டுவிட்டு, சூப்பர் பிரதமராக ஆனார். பிரதமர் பதவியை மறுத்துவிட்டு, அமைச்சரவை அந்தஸ்து கொண்ட பதவியை ஏற்றுக்கொண்ட தியாகத்தின் உதாரணம் உலகிலேயே எங்கும் கிடையாது. என்ஏசி தலைவர் பதவி அமைச்சரவை அந்தஸ்துடன் இருந்தது மட்டும் இன்றி லாபம் தரும் பதவியாகவும் இருந்தது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்தபோது, சோனியா காந்தி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் மீண்டும் வருவதற்கு முன்பாக, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு விதிமுறைகளை மாற்றி, என்ஏசி தலைவர் பதவியை லாபகரமான பதவி பட்டியலில் இருந்து நீக்கியது. அவசரநிலை அமல்படுத்தப்பட்டதற்கு தனது மைத்துனரான சஞ்சய் காந்தியே காரணம் என்றும், ராஜீவ் காந்தி அதற்கு எதிராக இருந்ததாகவும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் கூறியிருப்பதை ஏற்கமுடியாது.
ராஜீவ் காந்தி பல சந்தர்ப்பங்களில் அவசரநிலையை ஆதரித்துள்ளார். சோனியா காந்தி தனது நூலில் மேனகா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை விவரித்திருப்பது, அவசரநிலை பற்றிய கதையைவிட, ஒரு இந்திய மருமகளுக்கும் வெளிநாட்டு மூத்த மருமகளுக்கும் இடையிலான ஆழமான பகைமையின் கதை போல தோன்றுகிறது. அதில் குற்றச்சாட்டுகளின் பரிமாற்றமே அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.