கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள சோனியா காந்தியின் புத்தகம்

 
இந்தியா

‘இந்தியா குறித்த எனது பார்வை எவ்விதம் மோடியின் கருத்தியலுடன் மாறுபட்டது?’ - சோனியா காந்தி விவரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா குறித்த தனது பார்வை வேறு, பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை வேறு என தெரிவித்துள்ள சோனியா காந்தி, தனது பார்வை தனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றது என்றும், மோடியின் பார்வை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றது என்றும் விவரித்துள்ளார்.

தனது நினைவுக் குறிப்புகளை விவரிக்கும் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, புத்தகத்தில் உள்ள முக்கிய தகவல்கள் செய்திகளாக வெளிவந்துள்ளன.

இந்தப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்தியா குறித்த இருவரது பார்வைகள் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். ‘பிரதமர் நரேந்திர மோடியும் நானும் வெவ்வேறு கொள்கை உலகங்களைச் சார்ந்தவர்கள். இந்த நாடு குறித்த அவரது கருத்து, என்னுடைய கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இந்தியாவைப் பற்றி நான் கற்றுக்கொண்டவை அனைத்தும் எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும், அவர்களின் சேவை நிறைந்த வாழ்க்கையில் இருந்தும், பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் நம்பிக்கை நிறைந்த ஒரு தேசத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையில் இருந்தும் வந்தவை. அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்ற கொள்கைளின் அடிப்படையில் இது அமைந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தேசத்துக்காகவே நான் போராடுகிறேன்.

இந்தியா குறித்த நரேந்திர மோடியின் கருத்தியல் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை வகுப்பாளர்களாலும், அவர் வளர்ந்த சூழலாலும் கட்டமைக்கப்பட்டது. இது ஒரு அடிப்படைவாதத்தை முன்வைக்கிறது. இதில், அவரது சொந்த நம்பிக்கையும் கலாச்சாரமுமே மற்ற அனைத்தையும்விட மேலானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய இந்தியாவில் படிநிலை, ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை மையமானவை.

இந்தியா குறித்த தனது பார்வைக்காக அவர் போராடினார். எனது பார்வைக்காக நான் போராடினேன். என்னுடைய இந்தியா என்பது மேலாதிக்கத்துக்கு எதிரானது. அது அனைவரையும் உள்ளடக்கியது. மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியின் பக்கம் நிற்கக்கூடியது.

இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில், மோடி 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிரதமராக இருந்து வருகிறார். தற்போது அவர் தனது மூன்றாவது பதவிக் காலத்தில் உள்ளார். இன்றுவரை அவருடன் எனக்கு எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருந்தது இல்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடையும்போது, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரின் அறையில் கூடும் வழக்கமான நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நாங்கள் சந்திக்கிறோம்.

அது மிகவும் சிறிய அறை. அங்கு பொதுவாக பலர் இருப்பார்கள். நாங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்வோம். ஆனால், கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சிகளைத் சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த சுமுகத்துடனும் அன்புடனும் பழகி வந்தனர்.

நான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பல துயரச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் நேரில் கண்ட துயரங்கள் என் மனதை விட்டு நீங்காமல் வாட்டின.

2002-ல் குஜராத் மாநிலம் மதக் கலவரத்தால் சீரழிந்தது. கேபிள் தொலைக்காட்சிகளின் வருகையால், அந்த வன்முறையின் பெரும் பகுதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதன் அச்சமூட்டும் காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கின.

நேரலைச் செய்திகளை நாங்கள் மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தோம். குஜராத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த விரக்தியுடன் எங்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். ஆனால், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வன்முறையைத் தூண்டியதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தீவிர பிரிவான பஜ்ரங் தளம் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி’ என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT