இந்தியா

“சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்” - மனைவி கீதாஞ்சலி தகவல்

திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்றும் அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடருவதாக அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற உள்ள பேரணி திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரது உடல்நிலை பலவீனமடைந்ததை அடுத்து, டெல்லி போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலை அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை கருத்தில் கொண்டு டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு கட்டாயப்படுத்தவில்லை. ஒரு தனிநபரின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்றும், அதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றுமே உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க எடுக்கப்படவில்லை.

சோனம் வாங்சுக்குக்கு தற்போது எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. பரிசோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பரிசோதனையில், பொட்டாசியம் அளவு 2.9 ஆக உள்ளதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நேற்று பொட்டாசியத்தின் அளவு 4.3 ஆக இருந்தது. எனவே, இன்று அது 2.9 ஆக குறைய வாய்ப்பில்லை. எனவே, மருத்துவ அறிக்கையை காட்டுமாறு நாங்கள் கேட்டோம். ஆனால், அதை எங்களுக்குத் தர அவர்கள் மறுத்துவிட்டார்கள். இது குறித்து மற்றொரு ஆய்வகத்தில் சரிபார்க்க விரும்புகிறோம்.

சோனம் வாங்சுக் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சர்க்கரை எதையும் உட்கொள்ளாததால் அவரது உண்ணாவிரதம் தொடர்கிறது. உப்பு கலந்த நீரை மட்டுமே அவர் பருகி வருகிறார். இதற்கு முன்பும் உப்பு கலந்த நீரை அவர் பருகி வந்தார். அவரை இங்கு அழைத்து வந்து கவனித்துக் கொண்டதற்காக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்வோம். இதில் அரசின் தலையீடு தேவையில்லை. என்னிடம் முறையான அனுமதி பெறாமல் அவருக்கு எந்தவொரு மருந்தையோ அல்லது சிகிச்சையையோ அளிக்கக்கூடாது.

உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் பலவீனமடைந்துள்ளது. ஆனால், அவர் உறுதியுடன் இருக்கிறார். திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி திங்கள்கிழமை நடைபெறும். சோனம் வாங்சுக் அந்த பேரணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவருக்குப் பதிலாக நானே அந்த பேரணியை முன்னின்று நடத்துவேன். வலுக்கட்டாயமாக அவரை இங்கு கொண்டு வந்துவிட்டதால், பேரணியை தடுத்துவிட முடியாது” என தெரிவித்தார்.

இதனிடையே, தான் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். இங்குள்ள யாரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தி அவர்கள் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர். எல்லோரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்புங்கள். நமது இயக்கம் இங்கிருந்து வளரட்டும், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கட்டும்” என்று அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT