புதுடெல்லி: உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். அவருடன் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நேற்று முன்தினம் 20 நாட்களைக் கடந்த நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது. அவர் சுமார் 9 கிலோ எடையை இழந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்நிலையில், சோனம் வாங்சுக் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தினமும் 2 முறை உடல்நல பரிசோதனை செய்யுமாறு 3 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.
போராட்டம் நேற்று 21-ம் நாளை எட்டியது. இந்நிலையில், மருத்துவ பணியாளர்களும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஜந்தர் மந்தருக்குச் சென்றனர். அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வாங்சுக்கை தூக்கி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவரை விஎம்எம்சி சப்தர் ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட கால உண்ணாவிரதம் மேற்கொண்டது மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சோனம் வாங்சுக் பலவீனமாக உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராகஉள்ளது. அவரது உடல் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர அவருக்குத் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது.
எனினும், வாங் சுக் நரம்பு வழி திரவங்கள், வாய்வழி ரீஹைட்ரேஷன் கரைசல் (ஓஆர்எஸ்) மற்றும் இதர மருந்துகள் எதையும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அவரது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சிகிச்சையை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சோனம் வாங் சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.