புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இவற்றில் தனது பிரச்சார உத்தியை பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதில், தனது முக்கியக் களமாக சமூகவலைதளங்களில் அதிக கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரு தனி உத்தியையும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரு தனி உத்தியையும் பயன்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கான பிரச்சாரங்களில் தரவு சார்ந்த பிரச்சாரமாக, ஏ.ஐ. உதவியுடன் வீடியோக்கள், ரீல்ஸ்கள், குறும்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பாஜக பயன்படுத்தத் தயாராகி வருகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய தலைமையக வட்டாரங்கள் கூறியதாவது: இந்த முறை மக்களின் முக்கியக் களமாகியுள்ள சமூகவலைதளப் பிரச்சாரத்துக்கு அடிப்படையாக ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன்மூலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் தோல்விகளை நகைச்சுவையாகவும், உண்மையாகவும் எடுத்துக்காட்டும். இவற்றில் பல முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோரை குறிவைக்கும்.
கூடுதலாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் குறிவைத்து இந்த வீடியோக்கள் உருவாக்கப்படும். இந்தவகைப் பிரச்சாரங்களில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க அவை, ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டவை என தெளிவாகக் குறிப்பிடுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜகவின் உத்தியில் குறுகிய வடிவ வீடியோ உள்ளடக்கம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்கள், யூடியூப் குறும்படங்கள், பேஸ்புக் ரீல்கள் போன்ற தளங்களில் குறுகிய, ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் பிரபலமான வீடியோக்கள் மூலம் தனது செய்திகளையும், பிரச்சாரத்தையும் பரப்ப உள்ளது பாஜக. இந்த வீடியோக்களில் பிரதமர் மற்றும் மூத்த தலைவர்களின் உரைகளின் பகுதிகள், சாதனைகளின் சிறப்பம்சங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பாஜகவின் சமூக ஊடகக் குழு, தரவு சார்ந்த பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. வாக்காளர் சுயவிவரங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகளின் அடிப்படையில் இலக்கு செய்திகள் உருவாக்கப்படுகின்றன. வாக்குச்சாவடி மட்டத்தில் டிஜிட்டல் நெட்வொர்க்கிங் மற்றும் தரவு சார்ந்த செய்திகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளன.