கேத்தன் அகர்வால் | சியா கோயல் | சேத்தன் சவுத்ரி |
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் (25). இவருக்கும் சியா கோயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் மாதம் உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருந்தது.
இதனிடையே கேத்தன் அகர்வால் கொலை செய்யப்பட்டு சியா கோயலும், அவரது காதலர் சேத்தனும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, சியா கோயல் தனது கல்லூரி காதலனான சேத்தன் சவுத்ரியை 4 மாதங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக தற்போது போலீஸ் விசாரணையில் அம்பலாகியுள்ளது.
இந்தத் திருமணத்தில் சாட்சிகளாக கையெழுத்திட்ட சியாவின் 2 கல்லூரி தோழிகளிடமும் தற்போது புனே மாவட்ட ஊரகப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, அதை இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுப்பதற்கான முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கேத்தன், சியா இடையே நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் 4 மாதங்கள் கழித்து இந்த பதிவுத் திருமணம் நடந்துள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக கேத்தனின் குடும்பத்தினர், சியாவின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களைக் கேட்டுள்ளனர். இதனால் தங்களின் ரகசிய திருமணம் அம்பலமாகிவிடும் என்று பயந்துபோன சியா கோயலும் சேத்தன் சவுத்ரியும், கேத்தனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதமே சியா கோயல் தனது தோழி ஒருவருக்கு ஸ்னாப்சாட் செயலி மூலம் “உதய்பூர் திருமண டிக்கெட்டுகளுக்காக ஆதார் கார்டை அனுப்பு. எப்படி இருந்தாலும் இந்தத் திருமணம் நடக்கப் போவதில்லை” என்று முன்கூட்டியே செய்தி அனுப்பி இருப்பதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18ம் தேதி சியா கோயல், திட்டமிட்டபடி கேத்தனை புனேயில் உள்ள பிரபலமான லோஹாகர் கோட்டைக்கு டிரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே, காதலன் சேத்தன் சவுத்ரி அவர்களை ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்துள்ளார். கோட்டையின் உச்சிக்குச் சென்றதும், சியா கீழே உட்கார்ந்து சேத்தனுக்கு ரகசியமாக சிக்னல் கொடுத்துள்ளார்.
உடனே சேத்தன், கேத்தனை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளார். முதலில் இது விபத்து என்று கூறப்பட்ட நிலையில், போலீஸாரின் அதிரடி விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.