புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல்போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசாரணை நடத்தியுள்ளது. அந்த அறிக்கையில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் சந்தேகப்படும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும். பணியாளர் நியமனம், காணிக்கை எண்ணும் நடைமுறை மற்றும் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட கோயில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அறக்கட்டளை அதிகாரிகள் உட்பட யாரும் குற்றமற்றவர் என்று அறிக்கையில் கூறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட காணிக்கைகளைத் தணிக்கை செய்யவும், கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. ரொக்கப் பணம், கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் காணாமல் போனதையும் எஸ்ஐடி சுட்டிக்காட்டியுள்ளது.
வாரந்தோறும் தணிக்கை..
கோயில் நன்கொடை பணத்தை வாரந்தோறும் தணிக்கை செய்ய வேண்டும். காணிக்கை பணத்தின் மதிப்பை அன்றாடம் பதிவு செய்ய வேண்டும். சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை 45 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை பாதுகாக்கப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை குற்றம்சாட்டப் பட்டவர்கள் அயோத்தியை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் இடைக் கால அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், எவ்வளவு தொகை திருடப்பட்டுள்ளது என்ற விவரங்களை சிறப்புக் குழு தெரிவிக்கவில்லை. இந்த இடைக்கால விசாரணை அறிக்கையின் அடிப்படையில், உத்தர பிரதேச காவல் துறை 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.