லக்னோ: தமிழ்நாடு, மே.வங்கம், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபட்டுள்ளனர்.
உ.பி.யின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார் (46). அரசுப் பள்ளி உதவி ஆசிரியரான இவருக்கு பிஎல்ஓ பணி தரப்பட்டது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு முன் சர்வேஷ் குமார் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “அக்கா என்னை மன்னித்துவிடு, அம்மா எனது குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். என்னால் தேர்தல் வேலையை முடிக்க முடியவில்லை. 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு போதிய நேரம் இருந்திருந்தால் பணிகளை முடித்திருப்பேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் உலகை விட்டு வெகுதூரம் செல்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சர்வேஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.