ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுதர்சன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை மாதம் 24-ம் தேதி வரை தெலங்கானா மாநிலத்தில் வீடு, வீடாக வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு, வீடாக சென்று 2 படிவங்களை வழங்குவர். அதனை வாக்காளர்கள் நிரப்பி, அதில் ஒன்றை வீட்டுக்கு வந்த அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
மற்றொரு படிவத்தை பொதுமக்களே வைத்துக் கொள்ளலாம். ஆன்-லைனிலும் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கலாம். அதன் பின்னர், ஜூலை 31-ம் தேதி முதல் வாக்காளர் வரைவுப் பட்டியலை அனைத்து கட்சியினருக்கும் வழங்குவோம். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்படும்.
அதன்படி மறுசீராய்வு நடத்தி அக்டோபர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2002-ல் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணி நடத்தப்பட்டது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு விடக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.