இந்தியா

எஸ்ஐஆர் ‘ஃபார்ம்’ மோசடி: கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் மீது வழக்குப் பதிவு

மாநிலம் முழுவதும் பாஜகவினர் மீது குவியும் புகார்

இரா.வினோத்

பெங்களூரு: க‌ர்நாடகாவில் எஸ்ஐஆர் பணியின்போது போலி விண்ணப்பங்கள் தயாரித்து ஆயிரக்கணக்கானோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன‌. பெங்களூரு, மைசூரு, பெலகாவி, பீதர், மங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் போலியாக ஃபார்ம் 7 விண்ணப்பம் (பெயரை நீக்கும் ஆவணம்) விநியோகித்து ஆயிரக்கணக்கானோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக எஸ்சி,எஸ்டி, சிறும்பான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்ப‌தாக காங்கிரஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸார் தொடர் பிரச்சார போராட்டத்தை முன்னெடுத்துள்ள‌னர்.

பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

பெலகாவி மாவட்டத்தில் உள்ள வீரபத்ரா உருது மாதிரிப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை முகவராக பணியாற்றிவரும் மீர்சாப் சனதி, பெலகாவி வடக்கு தொகுதியை சேர்ந்த 198 முஸ்லிம்களின் பெயர்களை பாஜகவை சேர்ந்த ரவி பாட்டீல் உள்ளிட்டோர் போலியான 'ஃபார்ம்-7' விண்ணப்பங்களை கொடுத்து நீக்க முயற்சித்த‌தாக போலீஸில் புகார் அளித்தார். இதனை விசாரித்த பெலகாவி போலீஸார் பாஜக நிர்வாகி ரவி பாட்டீல் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே பீதர் தொகுதியில் 3,244 போலி ஃபார்ம் 7 தாக்கல் செய்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சித்ததாக பாஜகவினர் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல வாக்குச்சாவடி நிலை முகவராக பணியாற்றும் பெல்லாரியில் சீனிவாஸ் மொத்கூர் 7 ஆயிரத்து 651 போலி ஃபார்ம் 7 தயாரித்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக புகார் எழுந்தது.

சீனிவாஸ் மொத்கூர் வாக்காளர் பட்டியலில் இருந்து பட்டியலினம், சிறும்பான்மையினர் பிரிவுகளை சேர்ந்த 7,651 பேரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது பெல்லாரி போலீஸார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மைசூருவில் வாக்குச்சாவடி நிலை முகவராக பணியாற்றும் உதயகுமார் பசவந்தப்பாவை, முஸ்லிம்களின் பெயர்களை நீக்குமாறு மிரட்டியதாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில், கடந்த தேர்தலில் மல்லேஸ்வரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனுப் ஐயங்கார், “மல்லேஸ்வரத்தில் உள்ள 13வது வார்டில் வாக்குச்சாவடி நிலை முகவராக பணியாற்றிய தீபக் சிங், பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமாரின் ஆதரவாக செயல்பட்டுள்ளார். சுரேஷ்குமார் அளித்த போலியான ஃபார்ம் 7 விண்ணப்பங்களை 136 பேருக்கு அளித்து, அவர்களின் பெயர்களை நீக்கியுள்ளார்” என குற்றம்சாட்டினார்.

இதையடுத்து மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் அனுப் ஐயங்கார் அளித்த புகாரின்பேரில் பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார், வாக்குசாவடி நிலை முகவர் தீபக் சிங் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல ஜெயநகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சவும்யா ரெட்டி, “ஜெயநகர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பாஜக எம்எல்ஏ ராமூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் கணேஷ், அர்ஜூன் உள்ளிட்ட 6 பேர் 5698 ஃபார்ம் 7 விண்ணப்பங்கள் விநியோகித்து சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளார்” என போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் பாஜக எம்எல்ஏ ராமூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் கணேஷ், அர்ஜூன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆளுநரிடம் புகார்:

இதனிடையே, மத்திய அமைச்சரும் மஜத தலைவருமான குமாரசாமி தலைமையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா ,பாஜக மூத்த தலைவர்கள் கூட்டாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புகார் அளித்தனர்.

பின்னர் குமாரசாமி கூறுகையில், “எஸ்ஐஆர் விவகாரத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜகவினர் மீது வழக்குப் போடுகிறார். காவல் துறையினரை தவறாக வழிநடத்தும் டி.கே.சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT