கோப்புப் படம்

 
இந்தியா

ராகுல் காந்தி ஏற்பாடு செய்த தேநீர் சந்திப்பு - சித்தராமையா புறக்கணிப்பு

மோகன் கணபதி

பெங்களூரு: ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ள தேநீர் சந்திப்பில் சித்தராமையா கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவின் ஹசன் நகரில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், தம்மால் இந்த தேநீர் சந்திப்பில் பங்கேற்க இயலாது என்று கட்சி தரப்பிடம் சித்தராமையா கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில், இந்த தேநீர் சந்திப்பில் கர்நாடக பிரேதச காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஹசனில் நடைபெற உள்ள வருடாந்திர ஹசனாம்பா திருவிழாவில் பங்கேற்க உள்ளதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஹசனாம்பா கோயிலில் சாமி தரிசனம் செய்ய சித்தராமையா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சித்தராமையாவுக்கு எதிராக ஸ்டிங் ஆபரேஷன் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, டெல்லி சென்ற சித்தராமையா கடந்த 3-ம் தேதி ராகுல் காந்தியைச் சந்தித்தார். சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

சித்தராமையாவுடன் அவரது மகனும் கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான யதீந்திர சித்தராமையாவும் உடன் சென்றிருந்தார். ராகுல் காந்தி உடனான சந்திப்பை அடுத்து இவர்கள், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும், பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் சந்தித்தனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய சித்தராமையா குறித்த அந்த வீடியோ போலியானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு நகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள், திட்டமிட்டு புனையப்பட்டவை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களும் திரட்டப்பட்ட ஆதாரங்களும் காணொளியில் காட்டப்பட்டுள்ள எந்தவொரு சம்பவமும் உண்மையில் நடக்கவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT