இந்தியா

சித்தராமையா, சிவகுமார் மீண்டும் சந்திப்பு: தீராமல் தொடரும் கர்நாடக அரசியல் குழப்பம்!

டெக்ஸ்டர்

கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தினர்.

இதனால், காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கட்​சி​யின் மூத்த தலை​வர்​களான சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மேலிட பொறுப்​பாளர் ரன்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரிடம் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதனையடுத்து கடந்த நவ.30 அன்று முதல்வர் சித்தாரமையாவின் வீட்டுக்கு வருகை தந்த துணை முதல்வர் டி.கே.சிவகு​மார் அங்கு காலை உணவு சாப்பிட்டார். பின்​னர் இரு​வரும் தனி​யாக 15 நிமிடங்​கள் ஆலோ​சனை நட‌த்​தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.2) மீண்டும் சித்தராமையா, சிவகுமார் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த முறை சிவகுமாரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் சித்தராமையா. அங்கு அவருக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது டி.கே. சிவகுமாரின் சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷும் உடன் இருந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு, கர்நாடக காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலைக் குறைப்பதற்கான முயற்சியாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், “இரு தலைவர்களும் மீண்டும் சேர்ந்து காலை உணவு அருந்துவது வரவேற்கத்தக்கது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் குழப்பங்களுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.” என்று கூறியுள்ளார்.

கட்சியில் நிலவும் இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் டெல்லியில் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். “தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க டெல்லியில் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT