இந்தியா

“இந்தியா ஒரு இந்து நாடுதான்; அரசமைப்பு ஒப்புதல் தேவையில்லை” - மோகன் பாகவத்

மோகன் கணபதி

கொல்கத்தா: இந்தியா ஒரு இந்து நாடுதான் என்பதால் அதற்கு எந்த அரசியலமைப்பு ஒப்புதலும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், இந்தியா ஒரு இந்து நாடு என அரசியல் சாசனத்தில் சேர்க்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமா என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

அவர் தனது உரையில், ‘‘சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எப்போதில் இருந்து இவ்வாறு உதிக்கிறது என்பது குறித்து நமக்குத் தெரியாது. சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்பதற்கு நமது அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? இந்துஸ்தான் ஒரு இந்து தேசம்தான். இந்தியாவை தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் ஒவ்வொருவரும் இந்தியப் பண்பாட்டைப் போற்றுகிறார்கள்.

இந்துஸ்தானத்து மண்ணில் இந்திய மூதாதையர்களின் பெருமையை நம்பிப் போற்றும் ஒரே ஒரு நபர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து தேசம்தான். இதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். நாடாளுமன்றம் எப்போதாவது, அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையை (இந்தியா ஒரு இந்து தேசம் என்ற வார்த்தையை) சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, பரவாயில்லை. அந்த வார்த்தையைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் தேசம் ஒரு இந்து தேசம். இதுதான் உண்மை. பிறப்பின் அடிப்படையிலான சாதி அமைப்பு இந்துத்துவத்தின் அடையாளம் அல்ல.

பண்பாடு மற்றும் பெரும்பான்மையினரின் இந்து மத தொடர்புகளைக் கருத்தில் கொண்டு இந்தியா ஒரு இந்து தேசம் என்று ஆர்எஸ்எஸ் எப்போதும் வாதிட்டு வருகிறது. மதச்சார்பற்ற என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் முதலில் இடம்பெறவில்லை. பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, 1976ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் (42வது திருத்தம்) சோசலிச என்ற வார்த்தையும் மதச்சார்பின்மை என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டன.

நாங்கள் (ஆர்எஸ்எஸ்) முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு கருத்து இருக்குமானால், ஆர்எஸ்எஸ் பணிகளை ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்கலாம். ஏனெனில் எங்கள் பணிகள் வெளிப்படையானவை. அவ்வாறு பார்வையிடும்போது அப்படி ஏதேனும் நடப்பதை நீங்கள் கண்டால், உங்கள் கருத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. ஆனால், நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், யாராலும் உங்கள் மனதை மாற்ற முடியாது.

ஆர்எஸ்எஸ் பணிகளை நேரில் பார்த்த பலர், ‘நீங்கள் தீவிர தேசியவாதிகள் என கூறியுள்ளனர். நீங்கள் இந்துக்களை ஒருங்கிணைக்கிறீர்கள், இந்துக்களின் பாதுகாப்புக்காக வாதிடுகிறீர்கள். ஆனால், நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல’ என தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும்’’ என தெரிவித்தார்

SCROLL FOR NEXT