பாராமதி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த திங்கள் கிழமை விவாதம் நடைபெற்றது.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத "நினைவுக் குறிப்புகளில்" இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். அதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் பாராமதியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முயன்றார்.
அப்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத "நினைவுக் குறிப்புகளில்" இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், காந்தி அதன் நகலை வைத்திருந்தார். எனவே அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.