மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியின் எல்எல்ஏக்களில் 16 பேரும், எம்பிக்களில் 7 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவுக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அந்த கட்சியின் கதை 2029க்குள் முடிந்துவிடும் என்று சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களில் 16 பேரும், எம்பிக்களில் 7 பேரும் ஏக்நாத் ஷிண்டே உடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர்கள் சிவ சேனாவில் இணையக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவ சேனாவின் இந்த நடவடிக்கை, ஆபரேஷன் டைகர் என அழைக்கப்படுகிறது. இதனிடையே, ஜூன் 14 அன்று உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், “உத்தவ் தாக்கரேவின் கட்சி கொஞ்சம் கொஞ்மாக கரைந்து வருகிறது. அந்த கட்சியின் எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரே தலைமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். 2029-க்குள் அந்தக் கட்சியின் கதை முடிந்துவிடும். அந்தக் கட்சியின் தொண்டர்கள் தினமும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களின் எம்பிக்களின் விஷயத்தைப் பொருத்தவரை நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. அது அவர்களின் உள்கட்சிப் பிரச்சினை” என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர அமைச்சர் ஆஷிஷ் ஜெய்ஸ்வால், “சிவ சேனா (யுபிடி)-ல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து கருத்து சொல்வதற்கு இது சரியான நேரம் என நான் கருதவில்லை.
பால் தாக்கரேவின் மரபு ஏக்நாத் ஷிண்டே வசம்தான் இருக்கிறது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் தொகுதிக்காகவும், தங்களின் அரசியல் எதிர்காலத்துக்காகவும் அவர்கள் ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகே அது பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்கும். கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறது, போதுமான எண்ணிக்கை அவர்கள் வசம் இருக்கிறதா என்பதெல்லாம் அவர்களின் முடிவுக்கு உட்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், சிவ சேனா (யுபிடி)ல் இருந்து எம்பி, எம்எல்ஏக்கள் வெளியேற உள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிறைய தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், 4 நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டத்தில் இந்த எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டு, உத்தவ் தாக்கரேவின் தலைமை மீது தங்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
அவர்களில் சிலர், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்பதாக சத்தியம்கூட செய்துள்ளனர். அவர்கள் ஆபரேஷன் டைகர் நடவடிக்கையை எடுத்தால், ஆபரேஷன் ஓநாய் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.