ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: கல்வி சார்ந்து மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தம் வேண்டுமென்பதுமே நாடு முழுவதும் மாணவர் போராட்டம் எழுச்சி பெற்றதற்கு அடிப்படை காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட வீடுகளின் செலவு குறித்த ஆய்வறிக்கையில் கல்வி சார்ந்து மக்கள் அதிகம் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. 2014-15 மற்றும் 2025-26 காலகட்டத்தை ஒப்பிட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது. கல்வி சார்ந்து பெரிய தொகையை மக்கள் செலவிட்டு வருகின்றனர்.
கல்வி கட்டணம், பயிற்சி மற்றும் டியூஷன் கட்டணம், பாட புத்தகம், போட்டித் தேர்வுக்கு தயாராகும் பயிற்சிக்கான செலவு, கற்றல் சார்ந்த இதர செலவுகள் என இந்த பட்டியல் நீள்கிறது.
இந்த சூழலில் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்றவை மாணவர் போராட்டத்துக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், கல்வி சார்ந்த செலவுகள் அதிகரித்தது தான் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் மேற்கொள்ள அடிப்படை காரணமாக அமைந்திருக்கும். இப்போது கல்வியில் சீர்திருத்தம் வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு - சிஜேபி இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.