புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அணு சக்தி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் அணு சக்தி துறையில் தனியாரும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இதில் அமெரிக்கா, இந்தியா இடையிலான அணு சக்தி பொறுப்பு விதிகள் தொடர்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அணு சக்தி மசோதாவை ட்ரம்ப் சட்டம் என்றே அழைக்கலாம்" என்று குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமன்றி, அதானிக்காகவும் அணு சக்தி மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “அணு மின்சார உற்பத்தியில் அதானி குழுமம் ஈடுபடும் என்று அதன் தலைவர் கவுதம் அதானி அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டு, தனியார் பங்கேற்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதானிக்காகவே அணு சக்தி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது" என்றன.