ஏ.ஆர்.ரஹ்மான், தஸ்லிமா நஸ்ரின்

 
இந்தியா

‘‘ஷாருக்கான் தான் இன்றும் பாலிவுட் பாட்ஷா’’ - ஏ.ஆர்.ரஹ்மான் கருத்துக்கு தஸ்லிமா நஸ்ரின் பதிலடி

மோகன் கணபதி

புதுடெல்லி: பாலிவுட் சினிமா துறை மதச்சார்புள்ளதாக மாறிவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சித்திருந்த நிலையில், ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாகத்தான் இருக்கிறார் என்றும், சல்மான் கான், அமீர் கான், ஜாவேத் அக்தர், ஷபானா அஸ்மி ஆகியோர் சூப்பர் ஸ்டார்களாகத்தான் இருக்கிறார்கள் என்றும் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான் கேள்விப்பட்டவரை, அவர் மற்ற இசையமைப்பாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குபவர். அவர், ஒருவேளை மிகவும் பணக்கார இசையமைப்பாளராக இருக்கலாம்.

தான் முஸ்லிமாக இருப்பதால், பாலிவுட்டில் தனக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என்று அவர் குறை கூறுகிறார். ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கிறார். சல்மான் கான், அமீர் கான், ஜாவேத் அக்தர், ஷபானா அஸ்மி ஆகியோர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள்.

பிரபலமான, வசதிபடைத்த நபர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்கும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை.

என்னைப் போன்ற ஏழைகளுக்குத்தான் சிரமங்கள் ஏற்படுகின்றன. இத்தனைக்கும் நான் தீவிர நாத்திகராக இருந்தபோதிலும், எனது பெயர் காரணமாக நான் முஸ்லிமாகக் கருதப்படுகிறேன்.

முஸ்லிம்களை வெறுப்பவர்களுக்கு ஒருவர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்பது பற்றிக் கவலையில்லை. எனக்கு யாரும் வாடகைக்குக்கூட வீடு கொடுப்பதில்லை. நான் மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு என்னை ஏமாற்றி விடுகிறார்கள். நாத்திகராக இருப்பதற்காகவே நான் ஹைதாராபாத்தில் அடிவாங்கினேன். அவுரங்காபாத்தில் என்னால் காலடி எடுத்து வைக்க முடியாது. மேற்கு வங்கத்தில் இருந்து நான் விரட்டியடிக்கப்படுகிறேன்.

இதுபோன்ற சிக்கல்களை, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற முஸ்லிம் நட்சத்திரங்கள் ஒருபோதும் சந்திப்பதில்லை. நான் இந்திய குடிமகள் கிடையாது. இந்தியாவில் வசிப்பவர் மட்டுமே. இரண்டுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், வசிப்பவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் சொல்கிறது. நான் இந்த நாட்டை நேசிப்பதால் இங்கு வாழ்கிறேன். அதேநேரத்தில், எனது கொள்கைகள் மற்றும் லட்சியங்களில் இருந்து நான் ஒருபோதும் விலகுவதில்லை.

இஸ்லாத்தை நான் கடுமையாக விமர்சித்ததால், நான் நாடு கடத்தப்பட்டேன். இந்த நாட்டின் பொதுமக்களுக்கு நாத்திகத்தைப் பற்றியோ, நாத்திகம் முன்வைக்கும் மனிதநேயத்தைப் பற்றியோ பெரிதாக எதுவும் தெரியாது. அவர்களிடம் உண்மையில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இந்த மண்ணின் ஆண்களும் பெண்களும் என் சொந்த மக்கள். இந்த மண்ணின் கலாச்சாரம் எனது கலாச்சாரம்தான். அதைவிட்டுவிட்டு நான் எவ்வளவு தூரம் செல்ல முடியும்.

ஏ.ஆர். ரஹ்மான் இந்துக்கள், முஸ்லிமகள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், இறை நம்பிக்கையாளர்கள் என அனைவராலும் போற்றப்படுகிறார். அவர், தன் மீது பரிதாபப்படுவது அவருக்கு பொருத்தமற்றது’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், ”பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலை​யைத் தேடி நான் செல்​வ​தில்​லை. வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்” என்​றார்.

இந்​தப் பேட்டி சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இவரது கருத்துக்கு திரை துறையைச் சேர்ந்த பலர் எதி​ரான கருத்துக்களை தெரி​வித்​தனர்.

இதனையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘‘இசை எப்போதும் இந்​திய பண்பாட்​டுடன் இணைவதற்​கும், அதை கொண்​டாடு​வதற்​கும், மதிப்​ப​தற்​கு​மான ஒரு வழியாகவே எனக்கு இருந்து வரு​கிறது. இந்தி​யா ​தான் எனது ஊக்​கம், என் ஆசான், என் வீடு. சில நேரங்களில் நோக்​கங்​கள் தவறாகப் புரிந்​து​கொள்​ளப்​ படுகின்றன. ஆனால், இசை​யின் மூலம் முன்​னேறு​வது, மரியாதை செலுத்​து​வதும் சேவை செய்​வதுமே எப்​போதும் என் நோக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

யாரை​யும் புண்​படுத்த வேண்​டும் என நான் ஒரு​போதும் நினைத்ததில்​லை. என் நேர்​மையை மக்​கள் புரிந்து கொள்வார்​கள் என்று நம்​பு​கிறேன். நான் இந்​தி​ய​னாக இருப்​ப​தில் பெரு​மிதம் கொள்​கிறேன். இது​தான் கருத்து சுதந்​திரத்தை அனு​ம​திக்​கிறது. பல்​வேறு பண்​பாடு​களின் குரல்களை கொண்​டாட வைக்​கிறது. ஜெய் ஹிந்த், ஜெய் ஹோ’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT