ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரின் ஜெய்கர் கோட்டை அருகே, ஒரு ஜப்பான் சுற்றுலாப் பயணிக்கு ஐந்து நபர்கள் பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) காலையில், அம்பர் பகுதியில் அமைந்துள்ள ஜெய்கர் கோட்டையைப் பார்வையிடச் சென்ற ஜப்பான் சுற்றுலாப் பயணி, அங்கிருந்து அருகிலுள்ள கணேஷ் கோயிலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல் உதவி ஆணையர் சுரேந்திர சிங் தெரிவித்தார்.
"ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனிமையான இடத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஐந்து நபர்கள், அந்தப் பெண்ணை வழிமறித்து, அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதுடன், பாலியல் துன்புறுத்தலையும் அளித்தனர். உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட்டு உதவி கோரியதுடன், அங்கிருந்து தப்பித்து ஓடி, அருகிலிருந்த ஒரு பாதுகாப்பு ஊழியரிடம் நடந்ததை தெரிவித்தார். பாதுகாப்பு ஊழியர் வந்தவுடன் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்று அவர் கூறினார்.
அந்த பாதுகாப்பு ஊழியர், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஐந்து நபர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஜப்பான் சுற்றுலாப் பயணி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் குறித்த ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.