துறவி இந்திரதேவ் மகாராஜ்
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ‘கதை சொல்லி’ துறவி இந்திரதேவ் மகாராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த பக்தை ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான மதுராவின் பிருந்தாவனைச் சேர்ந்த துறவி இந்திரதேவ். வட மாநிலங்களில் பிரபலமான ஆன்மிகக் கதை சொல்லியான இவருக்கு பிருந்தாவனில் ’சேவா தாம்’ எனும் பெயரில் ஓர் ஆசிரமம் உள்ளது.
துறவி இந்திரதேவ் மகாராஜ் முதலில் புனேவில் சத்சங்கம் என்ற பெயரில் 2023-ல் கூட்டம் நடத்தி இருந்தார். இந்த கூட்டத்துக்கு வந்த அந்நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதனால், துறவிக்கு அப்பெண்ணுடனான தொடர்பு அதிகரித்துள்ளது.
அந்தப் பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகவும் துறவி இந்திரதேவ் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து அப்பெண்ணுக்கு தீட்சை அளிப்பதாகக் கூறி தனது ஆசிரமத்துக்கு அழைத்துள்ளார்.
இதனிடையே, ஆசிரமத்துக்கு சென்ற தன்னை, துறவி இந்திரதேவ் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் புனே பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மீரா - பயந்தரில் உள்ள காஷ்மீரா காவல் நிலையத்தில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது புகாரில் புனே பெண், ‘அவரது சேவா தாம் ஆசிரமத்துக்கு இரவில் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். யாராவது கேட்டால், மருந்து வாங்கச் செல்வதாகக் கூற வேண்டும் என என்னிடம் அறிவுறுத்தப்பட்டது.
துறவி இந்திரதேவ் அடிக்கடி வீடியோ அழைப்பில் ஆபாசமான சைகைகளைச் செய்தார். பின்னர் அவதூறு பரப்புவதாக மிரட்டி என்னை பண ரீதியாகவும் சுரண்டினார்’ எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட புனேவைச் சேர்ந்த அப்பெண், கடந்த எட்டு மாதங்களாக உத்தரப் பிரதேசத்தின் மதுரா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகாரை யாரும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், புனேவில் பூமாதா சமூகநல நிறுவனத்தின் பிரிகேட் திருப்தி தேசாய், அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். புனேவின் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்தபோது இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதன் பிறகு துறவி இந்திரதேவ் மீது காஷ்மீரா காவல் நிலையப் போலீசார் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து துறவி இந்திரதேவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என திருப்தி தேசாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருப்தி தேசாய், ’பாதிக்கப்பட்ட பெண், கடந்த எட்டு மாதங்களாக நீதிக்காக போராடி வருகிறார். ஆனால் அவரது புகார் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.
பெண்களின் நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் . பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பிற பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்
இந்தச் சொற்பொழிவாளரால் பாதிக்கப்பட்ட வேறு ஏதேனும் பெண்கள் இருந்தால், அவர்கள் அச்சமின்றி முன்வந்து புகார் அளிக்க வேண்டும். பெண்கள் இனியும் மவுனம் காக்காமல், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருப்தி தேசாயின் அமைப்பான 'பூமாதா ஃபவுண்டேஷன்', மதப் பிரசங்கங்கள் மற்றும் பக்தி என்ற பெயரில் பெண்களின் நம்பிக்கை சுரண்டப்படுவதாகக் குற்றம் சாட்டி வருவது நினைவுகூரத்தக்கது.