ஜெய்ராம் ரமேஷ்

 
இந்தியா

மேற்காசிய போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வது இந்தியாவுக்கு பின்னடைவு: காங்கிரஸ்

மோகன் கணபதி

புதுடெல்லி: மேற்காசியப் போர் தொடர்பான மத்தியஸ்தத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் உண்மையாக இருக்குமானால், அது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதில் பாகிஸ்தானும் ஈடுபட்டுள்ளதாக முன்னணி சர்வதேச ஊடகங்கள் பலவும் தெரிவித்துள்ளன. இது உண்மை எனில், இந்தியாவுக்கு பின்னடைவும் நிராகரிப்பும் ஏற்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. தன்னைத்தானே விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் அந்த நபரே இதற்கெல்லாம் காரணம்.

ஆபரேஷன் சிந்தூரில் சந்தேகத்துக்கு இடமின்றி நமது ராணுவம் வெற்றி பெற்ற போதிலும், அதன் பிறகான பாகிஸ்தானின் ராஜதந்திர ஈடுபாடும், கதைகளை உருவாக்குவதில் வெளிப்படுத்திய நிர்வாக அணுகுமுறையும் மோடி அரசாங்கத்தைவிட குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாகவே இருந்தது. இதன் காரணமாக, அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்திலும் மிகவும் அபாயகரமான சூழ்நிலையை சந்தித்து வந்த பாகிஸ்தான், ஒரு புதிய வாழ்வை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின், இந்தியாவுக்கு எதிரான ஆத்திரமூட்டும், தூண்டும் பேச்சுக்களே. ஆனால், அவரைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு பலமுறை அழைத்தார். முன் எப்போதும் இருந்திராத வகையில், அதிபர் ட்ரம்ப் அவருக்கு மதிய விருந்து உட்பட இரண்டு முறை உபசரித்தார். பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம், அதிபர் ட்ரம்ப்புடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான் தாக்குதலை நடத்துவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்றார். விவேகமற்ற அவரது இந்த பயணம், இந்திய அரசியல் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகவே நினைவுகூரப்படும். நாம் நடுநிலையாளராகச் செயல்பட்டு மத்தியஸ்தம் செய்திருக்கக் கூடிய; செய்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பை அந்த பயணம் பாழ்படுத்திவிட்டது. பிரதமரின் கட்டிப்பிடிக்கும் ராஜதந்திரம் இன்று மிகக் கடுமையாக அம்பலமாகியுள்ளது. இதற்கான விலையை செலுத்தும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது’’ என குற்றம் சாட்டியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT