விபத்தை ஏற்படுத்திய லாரி

 
இந்தியா

ஜார்க்கண்ட்டில் சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: ஜார்க்கண்ட்டின் குந்தி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த 18 சக்கர லாரி சாலையில் கூடியிருந்தவர்கள் மீது மோதியதில், மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் கூறுகையில், “குந்தியின் கார்ரா பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியுள்ளது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள், மூவர் பெண்கள், ஒருவர் ஆண். மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு கார்ரா - டோர்பா பிரதான சாலையில் நிகழ்ந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜார்க்கண்ட்டின் குந்தியில் நடந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரன் தனது இரங்கல் செய்தியில், “குந்தியின் கார்ரா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் அளிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT