புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பஸ்தாரா- கும்சர் பகுதியில் உள்ள கலாஹண்டி, ராயகடா மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருந்து வந்தது. இங்கு பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மாவோயிஸ்ட்கள் சரணடைவதையும் ஊக்குவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் மண்டல கமிட்டி உறுப்பினராக இருந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் மாநில டிஜிபி குரானியா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். இவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.22 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
சரணடைந்த மற்ற 5 பேருக்கு மொத்தமாக ரூ.63.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.கே.-47, இன்சாஸ் ரைபிள், எஸ்எல்ஆர் துப்பாக்கிகள் உட்பட 11 ஆயுதங்களை மாவோயிஸ்ட்கள் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில டிஜிபி குரானியா பேசுகையில், ”நகுல் போன்ற மூத்த மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளது மாவோயிஸ்ட் இயக்கம் பலவீனம் அடைந்துள்ளதை காட்டுகிறது. பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையால், ஒடிசாவில் மாவோயிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் அழிந்துள்ளது” என்றார்.