மும்பை: நிதிமுறைகேடு புகாரில் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாமனாரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வாசு பக்னானி மற்றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ ஆகியவற்றுடன் தொடர்புடைய, மும்பையிலுள்ள 12 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தயாரிப்புக்கு நிதி அளிப்பதாகக் கூறி, வெளிநாடுகளுக்கு நிதி திசை திருப்பப்பட்டதாக எழும் புகார்களின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மும்பை வருமான வரித்துறையைச் சேர்ந்த பல குழுக்கள், சந்தேகத்துக்குரிய வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளின் விவரங்கள், கணக்கு ஆவணங்கள்,நிதிப் பதிவேடுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் போதைப்பொருள் கடத்தியதாக இரு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 43 கிராம் கொக்கைன் மற்றும் 11.5 கிராம் எம்டிஎம்ஏ ஆகிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வழக்கில், நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரரான அமன் பிரீத் சிங், கைது செய்யப்பட்ட அந்த இரு தொழிலதிபர்களிடமிருந்தும் ஐந்துமுறை போதைப்பொருள்களை வாங்கியதாக மும்பை காவல்துறை் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் 1, இந்தியன் 2, என்ஜிகே உள்ளிட்ட பிரபல தமிழ்த் திரைப்படங்களில் ரகுல் பிரீத் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.மேலும், தீபாவளிக்கு வெளியாக உள்ள ராமாயணா படத்தில் சூர்ப்பனகையாகவும், இந்தியன் 3 படத்திலும் ரகுல் பிரீத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.