பெங்களூரு: கர்நாடக காவல் துறையில் பணியாற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின போலீஸாருக்கும் வீடு வாடகைக்கு தர மறுக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட வகுப்பை சேர்ந்த போலீஸார், கர்நாடக போலீஸ் டிஜிபி, பெங்களூரு மாநகர ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறுகையில், ''பெங்களூரு மாநகரில் பணியாற்றும் காவலர்களில் 40 சதவீதமானவர்கள் தங்கும் அளவில் அரசின் குடியிருப்புகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க அரசு தரப்பில் குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
அது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் சாதி பாகுபாடு காரணமாக வீட்டை வாடகைக்கு தர மறுப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.