பிஹாரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி | கோப்புப் படம்
புதுடெல்லி: “சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதேநேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது என்பது சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையைப் பறிப்பதாக அர்த்தமாகாது” என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிஹாரில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, இவ்வளவு பரந்த அறவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஜனவரி 29-ம் தேதி தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில், “சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. எந்தவொரு சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதியிலான விதியையும் தேர்தல் ஆணையம் மீறவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அதேநேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது என்பது சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையைப் பறிப்பதாக அர்த்தமாகாது.
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அது மேலதிக சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். குடியுரிமையை நிரூபிக்க இயலாத காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட்ட நபர்களை, உரிய சட்டரீதியான விசாரணைக்காக தகுந்த அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும்.
சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் முதலில் பிஹாரில் தொடங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களுக்கும் அது விரிவுபடுத்தியது. தேர்தலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர். இந்நிலையில், சிறப்பு தீவிரத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அதை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் உறுதிப்படுத்தி இருக்கிறது.