இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - எஸ்ஐஆருக்கு எதிரான ராகுல் மனு மீது உத்தரவு

ஞானேஷ் குமார், சாந்து, ஜோஷிக்கும் நோட்டீஸ்

மோகன் கணபதி

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தொடர்பாக விளக்கம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி தொடர் போராட்டங்களை இண்டியா கூட்டணி முன்னெடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தங்கள் எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, எஸ்ஐஆர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இண்டியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் முகமது பஷீர் உள்ளிட்ட 13 பேர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

எதிர்மனுதாரர்களாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

மனுவில், எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் மற்றும் அதை செயல்படுத்திய விதம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொது அரங்கில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரிடம் அவரது நடத்தை தொடர்பாக கேள்வி எழுப்ப விரும்புகிறோம் என சூர்யகாந்த் தெரிவித்தார்.

மேலும், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT