புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புலன்விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த 2025 அக்டோபர் மாதம் முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஆட்சேபம் இல்லை என தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு கடந்த ஜூலை 22-ம் தேதி திரும்பப் பெற்றது. இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி அமர்வில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, புலன் விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2 வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை செப்.23-க்கு தள்ளிவைத்தனர்.