இந்தியா

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பான சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பான சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித், செயற்பாட்டாளர் ஷர்ஜில் இமாம் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சித்தார்த் தேவ் ஆகியோர், இருவரும் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நிராகரித்துவிட்டது. “நாங்கள் இன்று இதை விசாரிக்கப் போவதில்லை. தஸ்லிம் அகமது வழக்கில் கடந்த மே 22-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உள்ள கருத்துக்களை கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு பெரிய அமர்வை அமைக்க வேண்டியுள்ளது.” என தெரிவித்த நீதிபதிகள், டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

முன்னதாக டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் மற்ற ஐந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கியது. எனினும், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பங்களிப்பு, தர ரீதியில் வேறுபட்டதாக இருப்பதாகக் கூறி அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

மேலும், ஓராண்டு காலத்துக்குப் பிறகோ அல்லது சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்த பிறகோ இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதைப் பொறுத்து அவர்கள் ஜாமீன் கோரலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT