புதுடெல்லி: டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் அது தொடர்பான சைபர் குற்றங்களைத் தடுக்க, எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கடந்த மாதம் 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் பிற சைபர் மோசடிகளுக்கு நிதி நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு மோசடி நடப்பதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் உரிய கவனத்துடன் செயல்படத் தவறியதே காரணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் அது தொடர்பான சைபர் குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திடம் தெரிவிக்க வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய விசாரணையின்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “டிஜிட்டல் கைது மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கெனவே சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 9,400 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட அமலாக்க அமைப்புகள், டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் அது தொடர்பான விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.