புதுடெல்லி: வீர சாவர்க்கர் ஒருபோதும் முஸ்லிம்களை வெறுத்ததில்லை என்றும் ஆனால், அவரை முஸ்லிம்களுக்கு எதிரானவராக ராகுல் காந்தி சித்தரித்துள்ளதாகவும் அவதூறு வழக்கில் அவரது பேரன் சத்யகி சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டு லண்டனில் ஆற்றிய உரை ஒன்றில் சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குறிப்பிட்டு அவரது பேரன் சத்யகி சாவர்க்கர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
மகாராஷ்டிராவின் புனே நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று ஆஜரான சத்யகி சாவர்க்கரிடம், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, சாவர்க்கரின் நற்பெயருக்கு ராகுல் காந்தி களங்கம் விளைவித்ததாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த சத்யகி சாவர்க்கர், “தானும் தனது நண்பர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் சேர்ந்து ஒரு முஸ்லிம் இளைஞரைத் தாக்கியதாகவும், அந்தச் செயலில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சாவர்க்கர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்” என்று ராகுல் காந்தி கூறியதை சத்யகி சாவர்க்கர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “இந்த வார்த்தைகள் மூலம், சாவர்க்கர் முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு கொண்டவராகவும், கும்பல் தாக்குதலில் ஈடுபடுபவராகவும் சித்தரிக்கப்பட்டார். சாவர்க்கர் ஒருபோதும் முஸ்லிம்களை வெறுத்ததில்லை. மாறாக, தனது எழுத்துக்களில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்” என்று சத்யகி சாவர்க்கர் கூறினார்.
ஒரு முஸ்லிம் இளைஞர் மீதான தாக்குதல் குறித்த சம்பவத்தை ராகுல் காந்தி தவறாக சாவர்க்கருடன் தொடர்புபடுத்தியதாகக் குற்றம் சாட்டிய சத்யகி சாவர்க்கர், இந்துத்துவக் கொள்கைவாதியான சாவர்க்கரின் எழுத்துக்களில் அத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார்.
விசாரணையின்போது, மகாத்மா காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவின் சகோதரரும், சத்யகி சாவர்க்கரின் தாத்தாவுமான கோபால் கோட்சே, 2004-ஆம் ஆண்டு அளித்த வீடியோ நேர்காணலையும், அதன் எழுத்துப்பூர்வ விவரத்தையும் வழக்கறிஞர் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், ‘எனது சகோதரர் நாதூராம் கோட்சே, ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தார். ஆனால், மகாத்மா காந்தியை கொல்லுமாறு ஆர்எஸ்எஸ் ஒருபோதும் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை’ என்று கோபால் கோட்சே தெரிவித்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை சுட்டிக்காட்டிப் பேசிய சத்யகி சாவர்க்கர், “வீர சாவர்க்கரின் வரலாற்றுப் பங்கு குறித்த விமர்சனத்துக்கும் அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விவாதத்தின் மூலம் தீர்க்க முடியும். ஆனால், ஒரு நபரை அவதூறு செய்யும் நோக்குடன் குற்றச்செயல்களுடன் அவரை தொடர்பு படுத்துவது சரியா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு தீவிர வன்முறைச் செயல் என்று தெரிவித்த சத்யகி சாவர்க்கர், அப்படுகொலையில் வீர சாவர்க்கருக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியவே ஜீவன்லால் கபூர் ஆணையம் அமைக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என குறிப்பிட்டார்.