இடது: வி.டி.சதீசன் | வலது: ஆர்.வி.பாபு
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தலைவருமான வி.டி.சதீசன் 2001, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவை நாடியதாக சங்பரிவார் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆர்.வி.பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான இந்து ஐக்கிய வேதியின் மாநில தலைவர் ஆர்.வி.பாபு, ‘‘2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக வி.டி.சதீசன் ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவை கோரினார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பி. ராஜுவிடம், சதீசன் தோல்வி அடைந்தார்.
இதையடுத்தே 2001, 2006 ஆகிய தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் ஆதரவை கோரினார். ஆர்எஸ்எஸ் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, கடந்த காலங்களில் இருந்ததுபோல் அல்லாமல் மாறுபட்டுள்ளது. ஆனால், சதீசன் தோல்வி அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். யுடிஎஃப், எல்டிஎஃப் இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.வி. பாபுவின் இந்தக் கருத்தை வி.டி.சதீசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், ‘‘தேர்தலில் நான் தோற்க வேண்டும் என்று விரும்பியதாக ஆர்.வி.பாபு கூறியுள்ளார். இதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் எனக்கு எவ்வித ரகசிய உடன்பாடும் இல்லை என்பது உறுதியாகிறது.
2001, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் நான் ஆர்எஸ்எஸ் ஆதரவைக் கோரியதாகக் கூறுவதில் உண்மையில்லை. எனது பரவூர் தொகுதியைச் சேர்ந்த ஆர்.வி.பாபு, காங்கிரஸ் எதிர்ப்பாளர். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சில கருத்துகளைத் தெரிவித்ததால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.
வி.டி. சதீசனின் இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.வி. பாபு, ‘‘2006-ல் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் வி.டி.சதீசன் கலந்து கொண்டார். முதலில் இதை அவர் மறுத்தார். ஆனால், தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல, 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற ஆர்எஸ்எஸ் உதவியை நாடியதை அவரே ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பாஜகவின் பி-டீம்தான் காங்கிரஸ் என்றும் விமர்சித்திருந்தார். பதிலுக்கு, மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியும் விமர்சித்தி வருகிறது. இந்நிலையில், வி.டி. சதீசன் விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.