புதுடெல்லி: தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடிய தலைவர் வைகோ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராட்டியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிய தலைவர் வைகோவின் ஆவேசமிக்கப் பேச்சுக்கள் எனக்குப் பெரும் ஊக்கமாக இருந்தன. தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்த அவரின் உணர்ச்சிப்பூர்வமான உரைகள், டெல்லிக்கு அப்பால் உள்ள மக்களின் மனதையும் தொட்டன.
=
மேடையில் வைகோவைப் பார்க்கும்போது அவருக்கு 82 வயது போல் தெரியவில்லை. சமாஜ்வாதி கட்சியின் சிவப்புத் தொப்பியை அவர் அணிந்திருக்கும் போது 28 வயது இளைஞர் போல் தோற்றமளிக்கிறார். வைகோவின் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நானும் எனது தொகுதி மக்களோடு மேலும் நெருக்கமாக இணைய விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வழக்கமாக கூட்டங்களில் இந்தி மொழியில் பேசும் அகிலேஷ் யாதவ் இந்நிகழ்ச்சி யில் ஆங்கிலத்தில் பேசினார். அவரது உரை சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது.