ஹைதராபாத்: பெற்றோரை கைவிட்டால் மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது அவர்களின் பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத் பிரஜா பவனில் நேற்று ‘பால பரோசா’ மற்றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்டங்களை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார். இதில் அவர் பேசும்போது, இந்த அரசு உங்களுக்காக உள்ளது என்பதை உரக்க கூறவே இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதே சமயத்தில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்பவருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசுப் பணியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இதேபோன்று விளையாட்டு துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு பணி ஒதுக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் அரசு பணியில் இட ஒதுக்கீடு, இந்திரம்மா வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பிரணய் திட்டம் மூலம் முதியோரை நல்ல வழியில் பாதுகாக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இனி பெற்றோரை ஒதுக்கி வைத்தாலோ, அனாதை இல்லங்களில் சேர்த்தாலோ, கைவிட்டாலோ அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதாமாதம் பிடித்தம் செய்து, அப்பணத்தை கைவிடப்பட்ட பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோரை கைவிடுபவர்களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோருக்கு உபயோகப்படா விட்டால், அவர்கள் இந்த சமூகத்துக்கு எப்படி உபயோகப்படுவார்கள்?
ஒவ்வொருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். சாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி நம் மாநிலத்துக்கு நிதி வழங்க வேண்டும். நம்முடைய
பிடிவாதத்தால் தான் மத்திய அரசு இறங்கி வந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.
விடுப்பு எடுத்ததில்லை: இக்கூட்டத்தின் போது தெலங்கானா அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் 2026-ம் ஆண்டின் டைரியை முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டு பேசும்போது, அரசில் உள்ள சுமார் 200 பேர் மட்டுமே இந்த மாநிலத்தை ஆண்டு விட முடியாது. 10.50 லட்சம் அரசு ஊழியர்களால் தான் இந்த மாநிலத்தை சிறப்பாக ஆள முடிகிறது. நான் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இது வரை ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. விடுப்பு எடுக்கலாம் என நினைத்தால் கூட ஏதோ சில பணிகளின் காரணமாக விடுப்பு எடுக்க முடியாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கு ரூ.1 கோடி காப்புரிமை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.