புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தருகிறார். தென்னாப்பிரிக்காவில் செயல்படும் ரஷ்ய தூதரகம் ரஷ்ய அதிபரின் டெல்லி வருகையை உறுதி செய்திருக்கிறது.
அதிபர் புதினின் வருகைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அண்மையில் கூறும்போது, “இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2026-ம் ஆண்டுக்கான மாநாடு ஆண்டு இறுதியில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்’’ என்றார்.