புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விஐபிக்கள், பணக்காரர்கள் அயோத்திக்கு வந்து ஒரே நாளில் தரிசனம் முடித்து திரும்ப விரும்புகின்றனர். அத்துடன் ராமர் சிலைக்கு அருகில் நின்று தரிசிக்க நினைக்கின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்கும் ஓட்டல் நிர்வாகிகளே விஐபி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ரூ.30,000 வரை வசூலித்துள்ளனர்.
ராமர் கோயில் ஊழியர்கள் சிலர் மூலம் ‘விஐபி’ அனுமதி சீட்டு வாங்கி அவற்றை ஓட்டல் நிர்வாகிகள் பிரித்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் காணிக்கை திருட்டில் முக்கிய குற்றவாளியான ராம் ஷங்கர் யாதவ் (எ) டின்னு யாதவுக்கும் இதில் தொடர்பு இருந்துள்ளது.
இதையடுத்து விஐபி அனுமதி சீட்டு வழங்கும் விவகாரத்தில் விதி மீறப்பட்டுள்ளனவா என்று எஸ்ஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
தவிர, ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகைப்படம் எடுக்கவும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல வழிகளில் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது குறித்து எஸ்ஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கூறியிருப்பதாவது:
காணிக்கை திருட்டு சம்பவம் லட்சக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் நிர்வாகத்தில் வெளிப்படையான நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். ராமர் கோயில் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் மரியாதை, நம்பிக்கை மற்றும் பக்திக்குரிய மையமாகத் திகழ்கிறது. இதில், பல தலைமுறைகளின் தியாகம் இடம்பெற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடையே நிலவும் குழப்பம் மற்றும் கேள்விகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
நிதி நடைமுறைகள் வெளிப்படையாகவும், கோயில் நிர்வாகம் முறையாகவும், அதன் ஆன்மிகப் புனிதத்தன்மை காக்கப்படும் வகையிலும் அமைய வேண்டும். அப்போதுதான், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்து சமூகத்தின் நம்பிக்கையை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.