பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அந்த சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாகவும் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் சின்னையா கடந்த ஆண்டு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் நடத்திய ஆய்வில் 3 எலும்புக்கூடுகள் சிக்கின. ஆனால் அதன் மண்டை ஓடுகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீஸார், புகார்தாரரான சின்னையா பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து தர்மஸ்தலா கோயில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே, ‘‘தர்மஸ்தலா கோயிலின் மாண்பை கெடுக்கும் வகையில் சின்னையா பொய்ப் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணியில் பலர் இருக்கின்றனர்'' என குற்றம்சாட்டினார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, ‘‘இதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலும், வேறு சில இந்து மத விரோதிகளும் இருக்கின்றனர்'' என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சின்னையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தர்மஸ்தலா கோயில் மீதும் அதன் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே மீதும் அவதூறு கிளப்புவதற்கு 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு மும்முரமாக வேலை பார்த்தது. அக்குழுவை சேர்ந்த சிலர் என்னை தொடர்புகொண்டு பணம் கொடுத்தனர். அவருக்கு எதிராக புகார் அளித்தால் ரூ.50 லட்சம் தருவதாகவும் கூறினர். அதன் பேரிலேயே போலீஸில் புகார் அளித்தேன். கோயில் மீது அவதூறு பரப்புவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது''என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ், ‘‘இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்க வேண்டும். இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்''என உத்தரவிட்டார்.
பிரகாஷ் ராஜின் பெயர்?
சின்னையாவின் புகார் மனுவில் நடிகர் பிரகாஷ்ராஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கன்னட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ், ‘‘தவறான, பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இன்னும் ஓரிரு தினங்களில் ஊடகங்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன்''என பதிலளித்துள்ளார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ‘‘ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளதாலேயே அவர் குற்றவாளியாகிவிட மாட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரியும்'' என்றார்.