பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங்

 
இந்தியா

‘பொது முடக்கம்’ என்பது வதந்தி மக்கள் நம்ப வேண்டாம்: மத்திய அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொது முடக்கம் மீண்டும் ஏற்படும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இந்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். பொது முடக்கத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்கு ஆசிய நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘நெருக்கடியை சமாளிக்க கரோனோ காலத்தில் அரசு தயார் நிலையில் இருந்ததுபோல, மேற்கு ஆசியப் போரால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க தயாராக இருக்கவேண்டும்’’ என்று கூறினார்.

          

இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ‘கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதுபோல தற்போது பொது முடக்கம் அறிவிக்கப்படக்கூடும்’ என்று வதந்தி பரவியது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியப் போர் காரணமாக, உலகம் முழுவதும் நிலையற்ற சூழல் காணப்படுகிறது. இதனால் எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்

தில் ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மக்களுக்கு அவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சவால்களை சமாளிக்க மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற நிலை ஏற்பட்டபோதெல்லாம், அவற்றை எதிர்கொள்ளும் திறனை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

பொது முடக்கம் மீண்டும் ஏற்படும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இந்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். பொது முடக்கத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இந்த நேரத்தில் நாம் அமைதியாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் வதந்தியை பரப்பும் முயற்சிகள் பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான செயல்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT