பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ராகுல் காந்தி

 
இந்தியா

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன்

மோகன் கணபதி

பிவாண்டி (மகாராஷ்டிரா): ஆர்எஸ்எஸ் நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக அப்போது பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிவாண்டி நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.

          

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் அளிக்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார். அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி பிவாண்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தை ஒட்டிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, மீண்டும் ஜாமீன் பெற்று திரும்பிச் சென்றார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இது ஒரு தனிப்பட்ட அவதூறு புகார். முந்தைய ஜாமீன்தாரரான சிவராஜ் பாட்டீல் காலமானதை அடுத்து, தற்போது மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் இன்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு விரைவாக நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ராகுல் காந்தி நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் உண்மையை முன்வைக்கப் போவதாகவும் ராகுல் காந்தி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை’’ என தெரிவித்தார்.

மனுதாரரான ராஜேஷ் குந்தே கூறுகையில், ‘‘மன்னிப்பு கேட்பது குறித்து எந்த பேச்சும் நடைபெற வில்லை. ஜாமீன் நடைமுறை முடிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் படுகொலையில் ஆர்எஸ்எஸ் அமைக்கு எந்த தொடர்பும் இல்லை என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிககை உள்ளது’’ என கூறினார்.

SCROLL FOR NEXT