ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்.

 
இந்தியா

வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!

வெற்றி மயிலோன்

இம்பால்: 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பின்னர், முதன் முறையாக நவம்பர் 20 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நவம்பர் 20 முதல் 22 வரை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் மணிப்பூருக்கு வருகைதருவதாக அம்மாநில பொதுச் செயலாளர் தருண்குமார் சர்மா தெரிவித்தார்

இதுகுறித்து பேசிய தருண்குமார் சர்மா, “ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழாவையொட்டி எங்கள் தலைவர் மாநிலத்திற்கு வருகை தருகிறார். நவம்பர் 20 அன்று இம்பாலில் உள்ள கோன்ஜெங் லெய்காயில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் புகழ்பெற்ற நபர்களை அவர் சந்திப்பார். நவம்பர் 21 ஆம் தேதி, மணிப்பூர் மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்களை பாகவத் சந்தித்து உரையாடுவார்.” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வன்முறை வெடித்ததிலிருந்து மணிப்பூருக்கு மோகன் பாகவத்தின் முதல் பயணம் இதுவாகும். அவர் கடைசியாக 2022-ல் மணிப்பூருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் பாகவத் தற்போது அசாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.

2023 மே.3 அன்று மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு, மணிப்பூரில் இந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கு 2027 வரை பதவிக்காலம் உள்ளதால், மீண்டும் மணிப்பூரில் அரசினை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அம்மாநிலத்துக்கு மோகன் பாகவத் செல்வது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT