புதுடெல்லி: அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவையை வழங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் இணைய சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது. அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானி மீது கடந்த 9-ம் தேதி எலான் மாஸ்க் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘உலகின் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னமும் எங்களுக்கு ஏன் அனுமதி உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா?’ என கேள்வியெழுப்பி இருந்தார்.
இந்நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (எஸ்ஜேஎம்) சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அந்த அமைப்பு சமர்ப்பித்தது.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன், “ஸ்டார்லிங்க் நிறுவனம் லேசர் அடிப்படையிலான செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான அவசர காலங்களில் இந்திய தரவுகள், உள்நாட்டைத் தாண்டி செல்வதற்கான வாய்ப்புகள் கவலைகளை எழுப்புகிறது.
அவ்வாறு உள்நாட்டைத் தாண்டி தரவுகள் வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது சேவைகளை துல்லியமாகக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. இவ்விஷயத்தில் ஸ்டார்லிங்க் உறுதியளிக்கவில்லை அல்லது அதன் தொழில்நுட்பம் அதை அனுமதிக்காமல் இருக்கலாம்.
குறிப்பிட்ட அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற ஸ்டார்லிங்க் தயாராக இல்லை என்பது தெரிகிறது. தற்போது இந்தியா பல்வேறு சட்டம் - ஒழுங்கு சவால்களுடன் போராடி வருகிறது. இத்தகைய சூழலில், இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்கள் பெரும்பாலும் வதந்திகளையும் தேசவிரோத கருத்துகளையும் பரப்பி வருகின்றன.
மேலும், இந்தியாவின் தற்போதைய மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்ஒர்க்குகள் மலிவு விலையில் சேவைகளை வழங்குகின்றன. தேவைப்படும்போது குறிப்பிட்ட பகுதிகளில் அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.