புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.5,685.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்துக்கு 2026-27 நிதியாண்டுக்காக மொத்தம் ரூ.22,118.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ‘மத்திய துறை திட்டங்கள் / திட்டப்பணிகள் – நாடுகளுக்கான உதவி' என்ற தலைப்பின் கீழ் ரூ.5,685.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் ஆவணங்களின்படி, பூடான் அதிகபட்சமாக ரூ.2,288.56 கோடியைப் பெற்றுள்ளது. இது தனது நெருங்கிய அண்டை நாட்டுடனான வளர்ச்சிப் பங்களிப்பில் இந்தியாவின் தொடர்ச்சியான கவனத்தை உறுதிப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து நேபாளத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கான நிதியுதவி 50% சரிவைக் கண்டுள்ளது. கடந்த பட்ஜெட் ஆண்டில் ரூ.120 கோடியாக இருந்த நிதி, 2026-27-ல் ரூ.60 கோடியாகக் குறைந்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஒதுக்கீடு ரூ.300 கோடியிலிருந்து ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது, மியான்மர் ரூ.300 கோடி, மாலத்தீவு ரூ.550 கோடி, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான உதவி ரூ.100 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது, மொரிஷியஸுக்கான உதவி ரூ.550 கோடியாக உள்ளது. வெளிநாடுகளுக்கான பேரிடர் நிவாரண ஒதுக்கீடு ரூ.80 கோடியாகவே நீடிக்கிறது.
ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, 2026-27 பட்ஜெட்டில் ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்துக்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. மூலோபாய இணைப்புத் திட்டமான இதற்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.