லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டம், தேவ்கஞ்ச் கிராமத்தில் வசிப்பவர் பராஸ்பன் பஹிலியா, விவசாயி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்டியாவில் கணக்கு வைத்துள்ளார்.
அஷ்டமி விழாவை முன்னிட்டு வங்கிக்கு விடுமுறை என்பதால், அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு ரீடா சென்று தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்தார். அப்போது, ரூ.9 கோடியே 99 லட்சத்து 49,588 இருந்ததைப் பார்த்து ரீடா மலைத்துப் போனார். ஏடிஎம்.மில் காட்டிய தொகையை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அது வைரலாகி விட்டது. பின்னர், தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரும் எடுக்கக் கூடாது என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் ரீடா திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதை அறிந்து அக்கம் பக்கத்தினர் ரீடாவின் நேர்மையைப் பாராட்டினர்.
தகவல் அறிந்த கரீம்கஞ்ச் பேங்க் ஆப் இண்டியா கிளை மேலாளர் ரிஷிகாந்த் பாண்டே கூறும்போது, "பணப் பரிமாற்றம் நடைபெறும் போதோ அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ தவறாக பணம் ரீடா வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கலாம். வங்கிக் கிளை திறந்தவுடன் அது சரி செய்யப்படும்" என்றார்.